சென்னையை புரட்டிப்போட்ட மாண்டஸ் புயல்… மீட்பு பணிகள் தீவிரம் ; 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
Author: Babu Lakshmanan10 December 2022, 8:48 am
சென்னை ; சென்னையை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், பல்வேறு இடங்களில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்ததால், வட கடலோர மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 செ.மீ. என்ற அளவில் கனமழை பதிவாகியிருந்தது. புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது. புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும்.
சென்னையில் இருந்து தற்போது 30 கி.மீட்டர் தெற்கு-தென் கிழக்கே மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் பின்பகுதி இன்னும் 1 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும்” என்று அவர் தெரிவித்தார். புயல் கரையை கடந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்புள்ளது, எனக் கூறினார்.