ருத்ரதாண்டவம் ஆடிய இஷான் கிஷான்… சர்வதேச போட்டியில் முதல் சதம் ; Celebration-ஐ பார்த்து ஷாக் ஆன கோலி!!
Author: Babu Lakshmanan10 December 2022, 1:45 pm
வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்தார் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த போட்டியில் காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா தொடரில் இருந்து விலகி விட்டார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோரும் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, இஷான் கிஷான், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் தவான் (3) ஏமாற்றம் கொடுத்தார். பின்னர், இளம் வீரர் இஷான் கிஷானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால், ஒருகட்டத்தில் தொடக்கவீரர் இஷான் கிஷான் அதிரடி காட்டத் தொடங்கினார்.
இதனால், 85 பந்துகளில் அவர் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். பின்னர், அதிரடி காட்டிய அவர் சிக்சருக்கு, பவுண்டரிக்குமாக பந்துகளை பறக்கவிட்டார். இதனால், 150 ரன்களை அடித்தார். இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். மறுமுனையில் நிதானமாக ஆடி வரும் கோலி, அரைசதத்தை பதிவு செய்தார்.
தற்போது, இந்திய அணி, 29 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.