காவல் நிலையத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் : பாக்., தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? NIA விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2022, 2:28 pm
பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இந்த மாவட்டம் உள்ளது.
தரன்தரன் மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் இந்த போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்தின் சுவர், ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்குள் கையெறி குண்டு விழுந்தது. இந்த தாக்குதலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
போலீஸ் நிலையத்தின் ஜன்னல், கதவு கண்ணாடி, சுவர் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் சொந்த ஊர் ஷர்கலி ஆகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தானில் உயிரிழந்தார். கடந்த மே மாதம் பஞ்சாப் போலீஸ் நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் ஹர்விந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்தது.
இதனால் தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன் பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையோர மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. தடய நிபுணர்களும் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.