இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான்.. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அசத்தல்.. சின்னாபின்னமான வங்கதேசம்!!

Author: Babu Lakshmanan
10 December 2022, 2:48 pm

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த போட்டியில் காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா தொடரில் இருந்து விலகி விட்டார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோரும் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, இஷான் கிஷான், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் தவான் (3) ஏமாற்றம் கொடுத்தார். பின்னர், இளம் வீரர் இஷான் கிஷானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால், ஒருகட்டத்தில் தொடக்கவீரர் இஷான் கிஷான் அதிரடி காட்டத் தொடங்கினார்.

இதனால், 85 பந்துகளில் அவர் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். பின்னர், அதிரடி காட்டிய அவர் சிக்சருக்கு, பவுண்டரிக்குமாக பந்துகளை பறக்கவிட்டார். இதனால், இஷான் கிஷான் முதல்முறையாக 200 ரன்களை விளாசினார். அப்போது, இஷான் கிஷானின் சாதனையை கொண்டாடும் விதமாக, சக வீரரான கோலி நடனமாடி அவரை மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால், மைதானத்தில் விசில் சத்தம் காதை அடைத்தது. இருவரும் சேர்ந்து 250 ரன்களுக்கு மேலாக ரன்களை குவித்தனர்.

தொடர்ந்து, அதிரடி காட்டிய இஷான் கிஷான் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும்.

அதுமட்டுமில்லாமல், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் 6வது வீரராகவும், இந்திய அளவில் 3வது வீரராகவும் உள்ளார். மேலும், இரட்டை சதமடித்த இந்திய வீரர்களில் ரோகித் சர்மா (3 முறை), சேவாக் (1), சச்சின் டெண்டுல்கர் (1) ஆகியோரை தொடர்ந்து இஷான் கிஷான் 4வது வீரராக சாதனை படைத்தள்ளார்.

மறுமுனையில் நிதானமாக ஆடி வரும் கோலி, சதத்தை பதிவு செய்து விளையாடி வருகிறார்.
தற்போது, இந்திய அணி, 40.3 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

  • Tamannaah Vijay Varma relationship காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
  • Views: - 460

    0

    0