தமிழகத்தில் வாக்கு வங்கி உயருமா…? திமுகவை வளைக்க அழகிரியின் புதிய பிளான்… காங்கிரசுக்கு கை கொடுக்குமா?…

Author: Babu Lakshmanan
10 December 2022, 6:15 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை பேரம் பேசி வாங்கவேண்டும் என்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அடிக்கடி நகைச்சுவையாக பேசுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா?…வேண்டாமா?… என்பது பற்றி அறிவாலய வட்டாரத்தில் விவாதம் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர் இப்படி பேசுவதுதான் இதில் ஹை லைட்டான விஷயம்!

அதுவும் பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகியவற்றை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர
திமுக தலைமை தீவிர முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 14 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை என்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

மிக அண்மையில் கும்பகோணம் நகரில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென்று ஒரு புதிய கணக்கை போடுகிறார்.

கே. எஸ். அழகிரி கூறும்போது,
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு சட்டப் பேரவை தொகுதிக்கு 100 இடங்களில் கொடியேற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி காங்கிரஸ் தொண்டர்கள் களப்பணி ஆற்றினால் மாநிலம் முழுவதும் 23,400 இடங்களில் கொடியேற்றுவதன் மூலம்
25 சதவீதத்துக்கும் அதிகமாக கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்த முடியும்.

இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சி காங்கிரஸ் மட்டும்தான். அதனால் அகில இந்தியக் கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற அவசியம் இன்றைக்கு மாநில கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை
மதச்சார்பின்மை கொள்கையுடன் உள்ள கட்சியுடன்தான் காங்கிரஸ்
கூட்டணி வைத்திருக்கிறது.

வடமாநிலத்தில் நடைபெற்ற
தேர்தலில் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளோம். இந்த வெற்றி ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைத்த வெற்றியாகும். பாஜக எவ்வளவோ முயற்சி செய்தும் இங்கு வெற்றி பெறமுடியததால், அக்கட்சியின் இறங்கு முகம் தொடங்கி விட்டது.

குஜராத் வெற்றிகூட நீர்க்குமிழியைப்போலத்தான். அவர்களது வெற்றி என்பது மதவெறியை உருவாக்கி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை விரும்பாதவர்கள் கூட வாக்களிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி தற்காலிகமானது. கொள்கை சார்ந்த வெற்றியாக இதை நான் கருதவில்லை. அக்கட்சியின் வெற்றி நீடித்து இருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்கு பின்னால் எந்தவிதமான தத்துவார்த்தமான பலமும் கிடையாது. 2 மாபெரும் சக்திகளுக்கு இடையே போட்டியிடும்போது நடுவில் புகுந்து வெற்றி பெறுகின்றனர்.

பிரதமர் மோடி என்ற பிம்பம் உடையக்கூடியதுதான், பிம்பங்களை எளிதாக உடைக்கலாம். அந்த சக்தி இருப்பதால்தான் இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெற்று அந்தப் பிம்பம் உடைக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிகமான தொகுதிகளை கேட்டு, கடந்த முறையை விடக் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவின் இன்றைய மற்றும் அன்றைய தலைவர்களால் வெற்றி பெற முடியவில்லை. வெற்றி பெறாதவர்கள் வளர்ந்திருக்கிறோம் என்று சொன்னால், அதை ஆமாம் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜகவிற்கு என ஒன்றுமே கிடையாது. பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான அவசியம் இப்போது கிடையாது. மதச்சார்பின்மையில் திமுக உறுதியாக இருப்பதால், அக்கட்சியை நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸின் வாக்கு வங்கியை உயர்த்துவது தொடர்பாக கே எஸ் அழகிரி போடும் கணக்கு சமூக ஊடகங்களில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

“மாநிலத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இதுவரை நீடித்தாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் கே எஸ் அழகிரி எதிர்பார்க்கும் அளவிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனால் 2019 தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒன்பது தொகுதிகளை திமுக மீண்டும் வழங்கினால் அதுவே பெரிய விஷயமாகத்தான் இருக்கும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஒரு சட்டப் பேரவை தொகுதிக்கு 100 இடங்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றினால் 234 தொகுதிகளிலும் 25 சதவீத வாக்கு தங்களது கட்சிக்கு கிடைத்துவிடும் என்று எதன் அடிப்படையில் அழகிரி கூறுகிறார் என்பது புரியவில்லை. அப்படியென்றால் இப்போது காங்கிரசுக்கு உள்ளதாக கூறப்படும் 5 சதவீத வாக்கு வங்கியையும் சேர்த்தால் மொத்தம் 30 சதவீதம் ஆகிவிடும்.

ஆனால் 1967-ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த நேரத்தில் மட்டுமே 38 சதவீத ஓட்டுகளை காங்கிரஸ் பெற்று இருந்தது. 1989ல் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது சுமார் 20 சதவீத வாக்குகளை வாங்கியது. அதன் பிறகு நடந்த எந்த ஒரு தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 20 சதவீத ஓட்டுகளை பெற்றதில்லை.

அப்படி இருக்கும்போது 234 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுவிட முடியும் என்று கே எஸ் அழகிரி எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது புரியவில்லை.

தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு, இளைய தலைமுறை வாக்காளர்களிடம் பாஜகவுக்கு ஒரு எழுச்சியை உருவாக்கி இருப்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடி தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை பெருக்குகிறார். அதை உணர்ந்து கொண்டதால்தான் அமைச்சர் துரைமுருகன் கூட பாஜக பிசாசு போல தமிழகத்தில் வளர்கிறது என்று சொன்னார். அதன் அர்த்தத்தை கேஎஸ் அழகிரி புரிந்துகொண்ட மாதிரியும் தெரியவில்லை.

ஆனால் காங்கிரஸ் கொடியை ஊர்கள் தோறும் ஏற்றினால் கட்சியின் வாக்கு வங்கி 25 சதவீதமாக உயர்ந்து விடும் என்கிறார். அவர் கூறுவதை பார்த்தால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு காங்கிரஸ் அபார வளர்ச்சி அடையும் என்று கண்களை மூடிக்கொண்டு நம்புகிறார் என்பது புரிகிறது. அவருடைய இந்த கூற்று அரசியலில் ஒரு கேலி பொருளாகவே பார்க்கப்படும்.

அதேபோல் டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் காங்கிரசுக்கு தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உருவெடுத்து வருவதை அழகிரி புரிந்து கொள்ளவில்லை.
இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் அதல பாதாளத்திற்கு சென்றதற்கு காரணம் ஆம் ஆத்மி மட்டுமே.

அது மட்டுமல்ல ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுத்து 2024 தேர்தலில் காங்கிரசுக்கு பெருத்த சவாலை ஏற்படுத்தும் நிலையும் தென்படுகிறது.

இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு தேர்தலில் மிகவும் சாதகமானதொரு சூழ்நிலையைத்தான் உருவாக்கும். அதேபோல பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே மோடி என்கிற தனிநபர் செல்வாக்கை கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்று கே எஸ் அழகிரி கூறுவதை ஏற்க கடினமாக உள்ளது.

மேலும் ஆம் ஆத்மி பல மாநிலங்களில் வேகமாக காலூன்றி வருவதால் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்குமா?… என்பதும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அத்தகைய சூழலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெறுவது குதிரை கொம்பான விஷயம்.

விரைவில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சியில் மூத்த தலைவர்களிடம் தன் மீதுள்ள அதிருப்தியை சரிக்கட்டும் விதமாக அழகிரி இப்படி 25 சதவீதம் பற்றி அள்ளி விட்டு இருக்கலாம். இதனால் புதிய தலைவருக்கு தேவையில்லாத தலைவலிதான் ஏற்படும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 460

    0

    0