மகனை அமைச்சராக்குவதே நோக்கம்… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் திமுக அரசு ; திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 2:20 pm

சென்னை ; ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் திமுக அரசு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லஞ்சமே திமுக அரசின் கொள்கை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து போராட்டங்கள் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பெகம்பூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் அதிமுக கட்சியின் பொருளாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- கடந்த எட்டு வருடங்களாக அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு மக்களை பாதிக்கும். எந்த ஒரு செயலும் செய்யாமல் மக்களுக்காக பாடுபட்ட அரசுதான் அம்மாவின் அதிமுக அரசு. ஆனால், தற்போதைய திமுக அரசு, ஒன்றை வருடங்களாக பொதுமக்களை பல்வேறு வகையில் பாதித்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு பல்வேறு வகைகளில் பொதுமக்களை பாதித்து வருகிறது.

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால், அந்த பேருந்துகள் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்துவது கிடையாது. அந்த பேருந்துகளை திமுக கட்சியை சேர்ந்தவர்களே ஓட்டுநர்களாகவும், நடத்துனர்களாக உள்ளனர். இதன் காரணமாக பேருந்துகள் குறிப்பிட்ட பகுதியில் நிற்பது கிடையாது. மேலும், பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தனர்.

ஆனால், தற்போது வரை வழங்கவில்லை தினமும் கொலை, கொள்ளை என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 20 முதல் 200 வரை கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. மின்சார கட்டணமும் ராக்கெட் போல் உயர்ந்து வருகிறது. திமுக அரசு முழுவதுமாக 5 ஆண்டு முடிக்கும் தருவாயில் அதிக அளவு மின் கட்டணம் உயர்ந்து விடும். தற்போது பொதுமக்கள் மின் கட்டணம் உயர்வின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதித்து வருகின்றன.

அதேபோல், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அதிக அளவில் மின்சார கட்டணம் உயர்வால் பாதிக்கப்பட்டன. மேலும், பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் திமுக அரசு தலையை ஆட்டி வருகிறது. எந்த திட்டங்கள் வந்தாலும், அதை எதிர்ப்பது கிடையாது. கடந்த காலங்களில் எடப்பாடி அரசு மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தது.

தமிழகத்தில் நாங்கள் கொண்டு வர மாட்டோம் என திட்டவட்டமாக கூறியது. ஆனால் தற்போதைய திமுக அரசு எதையும் எதிர்ப்பது கிடையாது. தொடர்ந்து மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவதே திமுக அரசு தான். தற்போது தனது மகனை அமைச்சராகவும், முதல்வர் ஆகவும் மாற்றுவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார், என்று கூறினார்.

மேலும், திமுக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 454

    0

    0