‘இனிமேல் கடன் வழங்கக் கூடாது’.. கும்பலாக சென்று தனியார் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டிய திமுக நகரமன்ற தலைவர்!!
Author: Babu Lakshmanan15 December 2022, 4:08 pm
நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். திமுக நிர்வாகியான இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேவேளையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிபாளையம் நகர் மன்ற துணைத் தலைவராக வெற்றி பெற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்று உரிமையாளர் விஜய் என்கிற குமார் என்பவரை கடந்த 9ஆம் தேதி தொழில் போட்டியின் காரணமாக நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் தனது ஆதரவாளர்கள் மற்றும் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து, புதிதாக இருசக்கர வாகனத்திற்கு கடன் வழங்குவது உள்ளிட்ட தொழில் ரீதியாக இனி கடன் வழங்க கூடாது என மிரட்டல் எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குமார் கொடுத்த புகார் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.