9 மாதங்களில் 3வது முறையாக நெய் விலை உயர்வு… சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி ; தமிழக அரசுக்கு எழும் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
16 December 2022, 11:53 am

சென்னை : திமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய் விலை 3வது முறையாக அதிகரித்திருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு, 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50.00ரூபாய் உயர்த்துவதாக (ஒரு லிட்டர் 580.00லிருந்து 630.00ரூபாய்) நேற்றைய தினம் (15ம் தேதி) இணையத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கும், ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், சபரிமலை ஐயப்பன் சாமி பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வை இன்று (16ம் தேதி) முதல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த அதிர்ச்சியை மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் அதுவும் நடப்பாண்டில் கடந்த 9மாதங்களில் நடைபெறும் மூன்றாவது விலையேற்றமாகும் இது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி 515.00ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் 535.00ரூபாயாகவும், ஜூலை 21ம் தேதி 535.00ரூபாயில் இருந்து 580.00ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாய் என கடந்த 9மாதங்களில் மட்டும் ஒரு லிட்டர் நெய்க்கு (20.00+45.00+50.00) 115.00ரூபாய் என இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத வகையில் நெய் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் விரோத செயலன்றி வேறில்லை என்பதால், மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் இந்த ஆவின் நெய் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறது, என தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 467

    0

    0