செல்போன் கவரை குறைவான விலைக்கு விற்றவருக்கு கொலை மிரட்டல் : அடித்து துன்புறுத்திய அதிர்ச்சி வீடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2022, 10:09 pm
பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்பவரை பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர் தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் விற்பனையை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.
தற்பொழுது பழனியில் ஐ எஃப் எஸ் சீசன் தொடங்கியுள்ளதால் பழனி நகர் காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் செல்போன் கவர்களை வைத்து வியாபாரம் செய்து வரும் ராஜனை பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்ற நபர் தாக்கியுள்ளார்.
மேலும் 50 ரூபாய்க்கு செல்போன் கவரை நீ விற்பனை செய்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என கேட்டு மிரட்டி கன்னத்தில் அடிக்கிறார்.
தொடர்ந்து பழனியில் இனி வியாபாரம் செய்தால் நீ இருக்கமாட்டாய் என கொலை மிரட்டல் விடுக்கிறார். இதை செல்போனில் பதிவுசெய்து செல்போன் கடைக்காரர்கள் மட்டும் உள்ள வாட்சப் குழுவில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து சாலையோர வியாபாரி ராஜனிடம் கேட்ட பொழுது :- மதுரையில் மனைவி மட்டும் இரண்டு பெண் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்வதாகவும், வேலை கேட்டுச் சென்றால் யாரும் வேலை கொடுக்காத நிலையில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், ஆனால் செல்போன் கவர்களை விற்பனை செய்யக்கூடாது எனக்கூறி ஒருவர் தன்னை மிரட்டியதாகவும் அடித்ததாகவும், தன்னை யாரும் காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
வேறு வழியின்றி வாங்கிய செல்போன் கவர்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அதே இடத்தில் கடை போட்டு விற்பனை செய்து வருவதாகவும் ஆனாலும் மேலும் பல கடைக்காரர்கள் வந்து தன்னை விரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பழனி முருகனை நம்பி வெளியூர் உள்ளூர் என வித்தியாசமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பெரும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கை வியாபாரிகள் மற்றும் வடநாட்டு வியாபாரிகள் என அனைவரும் பிழைக்கும் போது, குடும்ப வறுமை காரணமாக சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் ஏழை வியாபாரியை கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் கடைக்காரர்கள் பிடித்து அடிப்பதும் மிரட்டுவதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உழைத்து பிழைக்க நபரை உழைக்கக் கூடாது எனக்கூறி அடிப்பதும், அதற்கு சில கடைக்காரர்கள் ஆதரவாக இருந்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.