பிரமாண்ட திருமணமா…? வேண்டவே வேணாம்… CM ஸ்டாலினுக்கு வந்த திடீர் பயம்.. அமைச்சர்களுக்கு புதிய அட்வைஸ்!!
Author: Babu Lakshmanan19 December 2022, 6:00 pm
முதலமைச்சர் ஸ்டாலினிடம் கடந்த மூன்று மாதங்களில் திடீரென ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதையும் அதில் அவர் மிகுந்த கவனம் செலுத்துவதையும் அவருடைய சமீப கால பேச்சுகளின் மூலம் நன்கு உணர முடிகிறது.
குறிப்பாக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் நடத்தும் திருமண விழாக்கள் என்றால் எங்கே அதை பிரமாண்டமாக நடத்தி விடுவார்களோ? என்கிற அச்ச உணர்வுதான் அது.
முதலமைச்சர் புலம்பல்
அதனை சென்னையில் நடந்த அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது ஸ்டாலின் வெளிப்படையாகவும் குறிப்பிடவே செய்தார்.
அது, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுவில் “கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ துன்பப்படுத்துவது போல
நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது? நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்” என்று மனவேதனையை கொட்டியதற்கு இணையானது போலவும் இருந்தது.
அச்சம்
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் அப்படி என்னதான் பேசினார்?…
“ஒரு பொறுப்பு கொடுத்தால் அந்த பொறுப்பை முழுமையாக, வெற்றிகரமாக எல்லோரையும் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நிறைவேற்றக் கூடிய ஆற்றலை பெற்றவர் நாசர். அவர் எதை செய்தாலும் அதில் ஒரு பிரமாண்டம் இருக்கும். எனவே திருமணத்துக்கு தேதி கொடுத்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது.
அவர் ஆடம்பரமாக பிரமாண்டமாக செய்து விடுவாரே. அதனால் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமே. நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சினை இல்லை. அமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய நாசருக்கு ஏதாவது ஒரு இழுக்கு வந்தால் அது எனக்கு மட்டுமல்ல, இந்த கட்சிக்கே ஒரு அவப்பெயர் வந்து விடுமே. எங்கே என்ன தப்பு நடக்கும் என்று இன்று பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தும்மினால்போதும் அதை கண்டுபிடித்து செல்போனில் போட்டோ எடுத்து அதை வெளியிடக்கூடிய ஊடகங்கள் இன்று இருக்கிறது. அந்த அளவுக்கு இன்று சோசியல் மீடியா பரவி இருக்கிறது.
அதனால் அவரை கூப்பிட்டு சொன்னேன். ரொம்ப எளிமையாக இருக்க வேண்டும். ரொம்ப அமைதியாக இருக்க வேண்டும். கட்சிக்கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டு. ஏனென்றால் அவர் அந்த கொடியை ஏற்றி ஏற்றி வைத்து இந்த இயக்கத்தை வளர்த்து இருக்கிறார். அதில் நான் கட்டுப்பாடு சொல்ல மாட்டேன். ஆனால் பேனர் வேண்டாம். கட் அவுட் வேண்டாம். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், அதே நேரத்தில் இந்த இயக்கத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதை தட்டாமல் எனது கட்டளையை அப்படியே ஏற்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே அதற்காக நாசர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்”
என்று அவர் புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியினரின் திருமண பிரமாண்டம் குறித்து
இதுவரையில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்போதுதான் தன் மனதில் ஏற்பட்டுள்ள பய உணர்வை வெளிக்காட்டி இருக்கிறார்.
எதனால் இந்த மாற்றம் அவரிடம் ஏற்பட்டது?…அதன் பின்னணி என்னவாக இருக்கும்?…இது தொடர்பாக அரசியல் அரசியல் விமர்சகர்கள் சொல்வது என்ன?…
அமைச்சர் மூர்த்தி
“கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம்.
மதுரை பாண்டிகோவில் அருகே 20 ஏக்கர் நிலப் பரப்பில் மிகப் பெரிய மைதானம் அமைத்து அதில் கோட்டை போன்ற நுழைவு வாயில், அதையொட்டி நூற்றுக்கணக்கில் கரும்பு கட்டுகள், குலை தள்ளிய வாழை மரங்களின் அலங்காரம், ஒரு லட்சம் பேர் அமரும் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேருக்கு உணவு பறிமாறும் அரங்கம் என ஏராளமான பிரமாண்டத்தை காட்டி இருந்தார்.
இந்த திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இதை திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் திமுகவின் மண்டல மாநாடு என்றே கூறி இருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி எழுச்சி பெறவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர். பொதுவாக திருமண விழாவிற்கு நான் குறிப்பு எடுத்து செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன். மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா? எனக் கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல. மூர்த்திதான் பெரியது” என்று புகழ்ந்தும் தள்ளினார்.
யானைகளால் சர்ச்சை
அதேநேரம் மகனின் திருமணத்திற்காக அமைச்சர் 15 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் அதை அமைச்சர் மூர்த்தி அப்படியே மறுத்தார். அதிக அளவில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் வருவார்கள் என்பதால் பெரிய அளவில் பந்தல் போடப்பட்டது. திருமணத்திற்கும் குறைவான செலவுதான் ஆனது என்று விளக்கமும் அளித்தார்.
என்றபோதிலும் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில்தான் நடத்தப்பட்டது என்ற செய்தி தமிழக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டதாக பரவலான பேச்சு உள்ளது. அதை அகற்றுவது லேசான காரியமும் அல்ல.
போதாக்குறைக்கு, இந்த திருமணத்திற்காக கேரளாவில் இருந்து இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு வரவேற்பளிக்க நிறுத்தப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் தற்போது சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
திருமண நிகழ்ச்சிகளில் வளர்ப்பு யானைகளை நிறுத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னெச்சரிக்கை
இதெல்லாம் திமுகவின் மூத்த நிர்வாகிகளால் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதனால்தான் செப்டம்பர் 9-ம் தேதி நடந்த திருமணத்தை மனதில் வைத்து, சரியாக ஒரு மாதம் கழித்து அக்டோபர் 9-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில், அமைச்சர்கள், நிர்வாகிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் வேதனையோடு குறிப்பிட்டிருக்கலாம். அதை இப்போது மறுபடியும் அவர் அமைச்சர் நாசர் இல்லத் திருமண விழாவில் நினைவூட்டி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால் நாடாளுமன்ற, சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் அமைச்சர் மூர்த்தி மகனின் பிரமாண்ட திருமணம் தொடர்பான போஸ்டர்களை அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் அதிக அளவில் அச்சிட்டு மாநிலம் முழுவதும் அவற்றை ஒட்டி எதிர்ப்பு பிரச்சாரம் செய்யலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடனும் திமுக தலைவர் ஸ்டாலின் இப்படி பேசியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவேதான் தேவையற்ற விமர்சனங்கள் எழுவதை தவிர்க்க திருமண விழாக்களில் பிரமாண்டம் வேண்டாம் என்று அமைச்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் வெளிப்படையாக அழுத்தம், திருத்தமாக சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது” என அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.