‘நான் ஊழியர்தான்.. உங்க வேலைக்காரி கிடையாது’ ; நடுவானில் பயணியுடன் சண்டை போட்ட விமானப் பணிப்பெண்… வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan21 December 2022, 9:20 pm
நடுவானில் பறக்கும் விமானத்தில் பயணி ஒருவருடன் பணிப்பெண் ஒருவர் சண்டையிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர், அந்த விமானத்தில் இருக்கும் பணிப்பெண் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடுப்பான அந்தப் பணிப்பெண், “நான் ஊழியர்தான்.. உங்க வேலைக்காரி கிடையாது. எங்களைப் பார்த்து கைநீட்டி நீங்கள் கத்த முடியாது,” என்று மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இருவரையும் சக விமான ஊழியர்கள் சமாதானப்படுத்த செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனை விமானத்தில் பயணித்த சக விமானி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், விமானப் பணிப்பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் கபூர், “விமான பணிப்பெண்களும் சாதாரண மனிதர்கள் தான். விமான பணிப்பெண்களை பலர் வேலைக்காரிகளை போல் நடத்துவதை நான் பார்த்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.