உதயநிதியை காக்கா பிடிக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி… அதுக்காகத் தான் அந்த நாடகம் ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 8:09 pm

காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த செயலுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி, சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், அப்பகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- மதுரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சிலையில் காவிக் கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழி பிறவி என்பேன். அவன் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார்.

தற்போதைய தி.மு.க. அரசு மேற்கொள்ள உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை பணி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- எங்களுடைய ஆட்சி காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க., அரசு குடியேறியுள்ளது. எனவே, கொரோனா தொடர்பான பிரச்னையை, ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை வைத்து முறையாக கவனித்தால் போதும், எனக் கூறினார்.

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈ.பி.எஸ்., பங்கேற்பாரா…? என்ற கேள்விக்கு, “ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் இது குறித்து தெரியவரும். சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை என்றால் பங்கேற்பார்,” என்றார்.

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டிற்கு குறித்த கேள்விக்கு,”இது தொடர்பான பணி 2023 ஆண்டிற்குள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பணிகள் நிறைவடையவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி கடும் போராட்டம் நடத்துவோம்,” என தெரிவித்தார்.

அ.தி.மு.க., குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு : அ.தி.மு.க., தொண்டர்களை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தற்போதுய ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள்.

கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை வைத்து வருகிறார். உதயநிதி நாட்டுக்கு என்ன செய்தார் ? நயன்தாராவை கட்டிப்பிடித்ததும், ஹன்சிகாவை காதல் செய்ததையும் மட்டும் தான் செய்தார், என தெரிவித்தார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!