பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது ; ஏமாற்றம் அடைந்த பயணிகள்!!
Author: Babu Lakshmanan29 December 2022, 9:42 am
பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்தன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசித்து வருபவர்கள், பண்டிகை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதன்படி, சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல தென்மாவட்டங்களுக்கு மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.