வீடு புகுந்து 21 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை ; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற கும்பல் கைது…!!
Author: Babu Lakshmanan29 December 2022, 3:29 pm
மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு மதுரையில் உள்ள கரிசல் குளத்தில் 21 வயது மதிக்கத்தக்க பூமிநாதன் என்கிற கோழி என்ற இளைஞரை வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மதுரையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, கரிசல் குளத்தை சேர்ந்த ஜீவா (21), மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவமணி (@) தீப்பெட்டி (25), மணி ராஜா (22), நவீன்பிரசாந்த் (24) 4 பேரை கைது செய்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பூமிநாதன் மற்றும் அவரது நண்பரான முருகானந்தத்துடனும் கரிசல் குளத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பூமிநாதன் மற்றும் முருகானந்தம் இருவரும் சேர்ந்து ஜீவாவை அடித்து விட்டதாகவும், அதனால் முன்விரோதத்தில் ஜீவா மற்றும் அவரது கூட்டாளிகள் நேற்று மாலை முதல் பூமிநாதன் வீட்டின் அருகே காத்திருந்து பூமிநாதனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.