கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வு தேதி வெளியீடு.. பரிந்துரையின் பேரில் யாரும் வரக் கூடாது : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
30 December 2022, 2:17 pm

சென்னை ; தகுதியின் அடிப்படையில் தான் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசியதாவது :- தமிழக முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 பேர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அதில் பல குளறுபடிகள் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.

கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணைச் செயலர் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பேர் கொண்ட அந்த குழு தான் அவர்களை நேர்முக தேர்வு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

மேலும், நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதில், கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வு நடக்கும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின்படி 19 கௌரவ விரிவுரையாளர்கள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், என தெரிவித்தார்

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 50 பாடங்களில் இருப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் எட்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் வருகிற நான்காம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும், என தெரிவித்தார். விண்ணப்பதாரர்களிடம் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேர்முக தேர்வின் போது அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

தரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பிஎச்டி படித்தவர்கள் மற்றும் நெட் ஸ்லேட் தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூன்றாவதாக ஸ்லைட் நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சரியான முறையில் தகுந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 9915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் யார் எந்த பாடத்திட்டங்களில் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளைக்கு அறிவிப்போம், இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும், எனக் கூறினார்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!