ரூ.29 லட்சமல்ல… ரூ.1.88 கோடி அப்பே… கைவரிசை காட்டிய ராமநாதபுரம் கரூவூல கணக்கர் ; விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Author: kavin kumar31 December 2022, 9:54 pm
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.1.88 கோடியை கணக்கர் ஒருவர் ஆட்டைய போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தவர் முனியசாமி. முதுகுளத்தூரில் உள்ள கீழத்தூவல் கிராமம்தான் இவரது சொந்த ஊர் ஆகும். இதனிடையே, கருவூலத்தில் வழக்கமான தணிக்கை பணி அண்மையில் நடைபெற்றது. இதில் ரூ.29 லட்சம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கணக்கர் முனியசாமி கடந்த மாதம் ஓய்வூதியக் கணக்கில் இருந்த ரூ.29 லட்சத்தைத் தனது பெயரிலும், தனது நண்பரின் பெயரிலும் மாற்றியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இந்த கையாடல் குறித்து சார்நிலை கருவூல உதவி அதிகாரி செய்யது சிராஜுதீன் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணக்கர் முனியசாமியை தேடி வந்தனர். ஆனால், அதற்குள்ளாக அவர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். மேலும், முதுகுளத்தூர் கருவூலத்தில் கையாடல் செய்த பணத்தையும் அவர் திருப்பி செலுத்தினார்.
இந்நிலையில், முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் பணிபுரிவதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் 2016-ம் ஆண்டு முனியசாமி பணிபுரிந்திருக்கிறார். இதனால், அந்தக் கருவூலத்திலும் அவர் கையாடல் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 4 அதிகாரிகள் குழுவினர் கடந்த 10 நாட்களாக ஆய்வு செய்து ஆவணங்களைச் சேகரித்தனர்.
இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் கருவூலத்தில் செய்ததை போலவே, ராமநாதபுரம் கருவூலத்திலும் ரூ.1 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரத்து 719-ஐ முனியன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அவரது வங்கிக்கணக்கிலும், அவரது நண்பரின் வங்கிக்கணக்கிலும் வரவு வைத்து முனியசாமி கையாடல் செய்தது அம்பலமானது. இதன் தொடர்ச்சியாக, இந்த கையாடல் தொடர்பாகவும் கணக்கர் முனியசாமி மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது, முனியசாமி பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.