ரூ.22 ஆயிரம் பணம் எங்கே? அதிமுகவுக்கு பயந்து அவசர அறிவிப்பை கொடுத்த திமுக : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2023, 4:17 pm
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் முடித்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்
அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர்.
2022ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது. அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளோம். தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாட்சியாக அதிமுக செயல்படுகிறது.
வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும். திமுக அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் வழங்குவார்கள் என கூறினார்.
இதுவரை திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மாதம் ஆயிரம் ரூபாயும் , என்று வழங்கியிருந்தாலும், சிலிண்டர் மானியம் மாதம் 100 என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு 22ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை.
இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டத்திற்கு பயந்து தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது.
33ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து. எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படுகிறது என கடையில் எழுதி வைக்க வேண்டும்.
திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது என்றார்.