வாரிசு டிரெய்லரை பார்த்து அப்செட்டான விஜய் ரசிகர்கள்… அந்த விஷயத்தில் படக்குழு ஏமாந்தது எப்படி..?
Author: Babu Lakshmanan4 January 2023, 6:04 pm
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
பொங்கலுக்கு வாரிசுடன் வெளியாகும் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, வாரிசு படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கப் போகிறது..? நல்ல படமாக இருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வேண்டி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. அதில், வாரிசு படம் குடும்ப ரீதியான பாடமாக இருப்பது போன்று அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரைலராக இது இருந்தாலும், இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள போதும், இந்த டிரைலரிலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
இன்னுமா ரிலீஸ் தேதி முடிவு செய்யாமல் இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்களிடம் துணிவு படம் 11-ந் தேதியும், வாரிசு படம் 12-ந் தேதியும் ரிலீசாகும் என கூறியுள்ளார். ரிலீஸ் தேதி முடிவு செய்துவிட்டாலும் அதனை அறிவிக்காமல் இருப்பது தான் விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கப்பட்டது. ஆனால் இம்முறை வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதுவரை முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.