கஞ்சா போதையில் பாட்டியின் காலை உடைத்த பேரன் ; பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரம் : கைது செய்து சிறையில் அடைப்பு
Author: Babu Lakshmanan6 January 2023, 11:52 am
திருவள்ளூர் : பணம் கேட்ட பேரன் தர மறுத்ததால் கஞ்சா போதையில் மூதாட்டியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிய பேரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (75). கணவர் கோவிந்தன் உயிர் இழந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி மூதாட்டி சரோஜாம்மாளிடம், கஞ்சா போதையில் இருந்த அவரது பேரன் வினோத் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால், அவர் பணம் தர மறுத்த நிலையில், கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட முயற்சித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து அவரை உருட்டு கட்டை மூலம் தாக்கி அவரது காலை உடைத்தார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது வினோத் தப்பி ஓடி தலைமறைவானார்.
சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பி ஓடிய மூதாட்டியின் பேரனான செங்கரையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவரது மகன் வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காலில் காயம் அடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்ற நிலையில், தலைமறைவாக இருந்த பேரனுக்கு பயந்து தற்போது வரை அவர் வீட்டிற்கு மீண்டும் வராமல் உள்ளார்.
இந்த நிலையில், பேரன் வினோத் கைது செய்யப்பட்ட நிலையிலும் மூதாட்டி, அவரது வீட்டிற்கு வராமல் உறவினர்கள் வீட்டிலேயே தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.