முன்னாள் முதல்வருக்கு அனுமதி மறுப்பு… போலீசார் முட்டுக்கட்டை போட்டதால் போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி தலைவர்!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2023, 4:27 pm
குப்பம் அருகே உள்ள குடிப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய குப்பம் தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
ஆனால் திறந்த வாகனத்தில் சென்று மைக்கில் பேசி பொது மக்களை சந்திக்க அவருக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் அவருடைய பிரச்சார வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
எனவே கடந்த மூன்று நாட்களாக பாதயாத்திரையாக சென்று பொதுமக்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து வந்தார்.
அவருடன் ஆயிரக்கணக்கான தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோரும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குப்பம் அருகே உள்ள குடிப்பள்ளியில் இன்று பாதயாத்திரை நடத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கட்சி அலுவலகத்திற்கு செல்ல புறப்பட்டார்.
ஆனால் போலீசார் அவர் கட்சி அலுவலகம் செல்ல அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு திடீரென்று தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனால் அங்கு பெரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இது போன்ற தடை விதிக்கும் செயல்களில் மீண்டும் மீண்டும் போலீசார் ஈடுபடக்கூடாது என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.