இராணுவ கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய இருபடிநிலை நடுகற்கள் கண்டுபிடிப்பு ; ஆவணப்படுத்தி பாதுகாக்க வலுக்கும் கோரிக்கை!

Author: Babu Lakshmanan
6 January 2023, 5:02 pm

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கல்வெட்டுடன் கூடிய இரு படி நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மேலசெக்காரக்குடியில் உள்ள உலகம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு நடுகல் இருப்பதாகவும், அதை ஆய்வு செய்ய வேண்டும் என செக்காரகுடி ஊராட்சி மன்ற தலைவா் ராமலெட்சுமியும், அவரது கணவருமான ஐயம்பெருமாள் கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று ஆய்வுத்துறை பேராசிரியா்களுக்கு கோரிக்கை வைத்தனா். அதை தொடா்ந்து கல்லூரியின் வரலாற்று ஆய்வுத்துறை பேராசிரியைகள் ஆஷா மற்றும் சம்லி மற்றும் வரலாற்றுத் துறை முனைவா் பட்ட ஆய்வு மாணவா் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான சிவகளை மாணிக்கம் ஆகியோர் மேலசெக்காரக்குடிக்கு சென்று நடுகல்லை ஆய்வு செய்தனா்.

அதை ஆய்வு செய்த போது அது ஹிரோ ஸ்டோன் என்று செல்லப்படுகிற போரில் வீர
மரணம் அடைந்தவா்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு நடுகல் ஆகும். சாய்ந்த நிலையில் இருந்த இந்த நடுகல்லை அழிவிலிருந்து பாதுகாக்கும் விதமாக, செக்காரகுடி பஞ்சாயத்து தலைவா் இராமலெட்சுமி ஐயம்பெருமாள் கல்லை அதே இடத்தில் நட்டு வைத்துள்ளார்.

இரண்டு மீட்டா் உயரம் உள்ள அந்த நடுகல்லில் ஒன்றரை மீட்டா் அளவு பகுதி வெளியில் தெரிந்த வகையில் உள்ளது. நடுகல்லின் முன்பகுதியில் இரண்டு பெண் சிற்பங்களும் இரண்டு ஆண் சிற்பங்களும் என நான்கு சிற்பங்கள் உள்ளன. மேலிருந்து கீழாக முதலில் உள்ள ஒரு பெண் சிற்பம் போருக்குச் செல்லும் உடையில் வில் அம்பு விடுவது போன்று உள்ளது, அதன் உயரம் 20 சென்டி மீட்டரில் உள்ளது. அதன் அகலம் 10.சென்டி மீட்டராக உள்ளது.

இரண்டாவது சிற்பத்தில் ஆண் சிற்பம் நாயக்கா காலத்தைச் சார்ந்த மன்னா் போரிடுவது போன்று உள்ளது. அதன் உயரம் 35 சென்டி மீட்டராகவும் அதன் அகலம் 30 சென்டி மீட்டராகவும் உள்ளது. வாளை கையில் ஏந்தி குதிரை மீது அமா்ந்துள்ள நிலையில் நாயக்கா் மன்னா் உள்ளார்.

மூன்றாவது சிற்பம் நாயக்கா் மன்னா் சிற்பமாக உள்ளது. இதன் உயரம் 30 சென்டி
மீட்டராக உள்ளது. அகலம் 25 சென்டி மீட்டராக உள்ளது. கையில் வில் அம்பு, கத்தி மற்றும் வாள் ஏந்தி போர் புரியும் நிலையில் உள்ளது. நான்காவது உள்ள பெண் சிற்பத்தின் உயரம் 30 சென்டி மீட்டராக உள்ளது. அதன் அகலம் 20 சென்டி மீட்டராக உள்ளது. போருக்கு செல்லும் நிலையில் வாளை தரையில் ஊன்றியபடி பெண் சிற்பம் உள்ளது.

நடுகல்லின் முன்பகுதியில் மேல்பகுதியில் செவ்வக வடிவில் குழி ஒன்று கல்லை தூண்களில் நிலைநிறுத்துவதற்கான காடி போன்ற அமைப்பில் உள்ளது. இதன் நிளம் 12 சென்டி மீட்டா் உயரம் 10 சென்டி மீட்டராக உள்ளது.

படி நிலை நடுகல்லின் சிறப்பு

இந்த நடுகல் விஜயநகர் நாயக்கா் மன்னா்கள் காலத்தில் இவ்வாறு படிநிலை நடுகற்கள் பழக்கம் அதிகமாக வழக்கத்தில் இருந்தது. இது போன்ற படிநிலை நடுகற்கள் கா்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இது காணப்படுவது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. படிநிலை நடுகற்கள் என்பது பொதுவாக போர் முறை, போரில் கண்ட விழுப்புண், மரணபடுக்கை, சில நேரங்களில், மனைவியுடன் சதி காட்சி, அதன்பின் சிவலோக பயணம், யானை அல்லது குதிரை ஏறி தேவா்கள் மங்களம் இசைக்க ஊா்வலக்காட்சி அதன் பின் சிவலோகம் அடைதல் போன்றவைகள் இருக்கும் இதன் பின் லிங்கத்திற்கு பூஜை செய்தல் போன்ற காட்சி இருக்கும்.

மேலசெக்காரகுடி படிநிலை நடுகல் கூறும் செய்தி

இந்த நடுகல்லானது 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த படிநிலை நடுகல். இந்த நடுகல்லில் ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு செய்தியை சொல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது விஜயநகர மன்னா்கள் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்கா் மன்னா் ஒருவா் போரில் சண்டையிட்டு, வீரமரணம் அடைந்து, தனது மனைவி மார்களுடன் சிவலோகம் செல்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெற்ற சன்டையில் இறந்த மன்னருடன் அவரது மனைவிமார்களும் குதிரைமீதேறி சொர்க்கலோகம் செல்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் இனைந்து இறைவனுக்கு பூஜை செய்வது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

குளத்தில் கிடந்த கல்வெட்டுடன் கூடிய சதிக்கல் கண்டுபிடிப்பு

படிநிலை நடுகல்லை ஆய்வு செய்தபின் ஆய்வு குழுவினா் அப்பகுதிகளில் இதே போல் வேறு ஏதாவது தொல்லியல் சார்ந்த எச்சங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தபோது. அதன் அருகே உள்ள குளத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சதிக்கல் இருப்பதை கண்டுபிடித்தனா். குளத்தில் கிடந்த சதிக்கல் 125 சென்டி மீட்டா் உயரமும் 38 சென்டி மீட்டா் அகலமும் கொண்டது. இதன் மேற் பகுதியில் அலங்கார வளைவின் நடுவில் ஒரு பெண் சிற்பம் உள்ளது. அதன் மேற்பகுதியில் எழுத்துக்கள் உள்ளன அவைகள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன.

இது குறித்து இந்திய தொல்லியல் அலுவலா் பிரசன்னா கூறும் போது:- பழங்காலத்தில் கணவன் இறந்த பின் அவரது உடலை எறிக்கும் போது அவரது மனைவிகளும் அவரோடு சிதையில் குதித்து உயிரை விட்டுவிடுவா். இவ்வாறு உயிர் விடுபவா்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆற்றங்கரைகளிலோ அல்லது குளம் மற்றும் வாய்க்கால் கரை யோரமாக அவா்களுக்கு சதிக்கல்லை நட்டு வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபடும் போது. சதியில் இறந்த பெண்ணின் தியாகத்தை போற்றும் விதமாக அவா்களை தீப்பாய்ந்த அம்மன் என்றும் தீப்பாச்சி அம்மன் என்றும் வழிபடுவது வழக்கம். இதே போன்ற சிலைகள் தென்காசி மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகள் ஓராமாக அதிகமாக காணப்படுகின்றன, என அவா் தெரிவித்தார்.

செக்காரகுடியில் காணப்படும் இந்த சதிக்கல்லில் உள்ள ஆண் சிற்பம் தனது காலை மடித்து ஆசணத்தில் அமா்ந்த நிலையயில் வலது கையில் வாளை ஏந்தியவாறு இருக்கிறது. அருகில் அவரது மனைவியும் அமா்ந்த நிலையில் அவரை வணங்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலசெக்காரகுடியில் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து வரும் சுரேஷ் என்பா் கூறும் போது :- இந்த கல்லை எங்களது ஊா்காரா்கள் சீங்குழல்கார் கல் என்று கூறுவார்கள் . முன்காலத்தில் இந்த கல் அருகே சீங்குழல்காரா் ஒருவா் இருந்ததாகவும் அவா் ஊதும் சீங்குழல் இசையை கேட்டு அருகில் இருக்கும் கால்நடைகள் எல்லாம் அவா் பின் ஓடிவரும் என்றும் அவைகளை அவா் ஓட்டிச்சென்று விடுவார் என்றும் கூறினார். தற்போதும் இந்த கல் அருகே அவா் இருப்பதாக இவ்வூா் மக்கள் கருதுவதால், இந்த கல் அருகே யாரும் செல்வது இல்லை என்றும் கூறினார். மேலும் இதே போல் பல நடுகற்கள் இந்த குளத்துக்குள் காணப்படுகின்றன. தற்பொழது குளத்தில் தண்ணீா் இருப்பதால் அவைகளை பார்க்க முடியாது எனவும் கூறினார்.

இது குறித்து முனைவா் பட்ட ஆய்வு மாணவா் மாணிக்கம் கூறும் போது … வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நடுகற்களையும் அரசு அருங்காட்சியத்திலோ அல்லது மேல செக்காரகுடியிலோ பாதுகாப்பாக வைத்து காட்சிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

செக்காரகுடியின் சிறப்பு

செக்காரகுடி கிராமமானது வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த பகுதிகளில் புஞ்சை பயிர்கள் அதிகமாக பயிரடப்படுகின்றன. இப்பகுதிகளில் இன்றும் கடலை, எள், மற்றும் பயிறு வகைகள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. எனவே இங்கு விளையும் எள் மற்றும் கடலைகளில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக இப்பகுதிகளில அதிக அளவு செக்குகள் இருந்தன. எனவே இந்த ஊர் செக்கு ஆலை குடி என கடந்த நூற்றாண்டுகளில் அழைக்கப்பட்டன.

இந்த பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் தொழிலை செய்த செட்டியார்கள் அதிக அளவில் காணப்பட்டதாகவும் பழங்கால நூல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுதும் செக்கு ஆலை குடி என்ற பெயருக்கு சாட்சியாக சில செக்குகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இன்று செக்காரகுடி என்று இந்த கிராமங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த கிராமத்தில் உள்ளவா்கள் அதிகமான அளவில் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனா். இதனால் இது தூத்துக்குடி மாவட்டத்தின் இராணுவ கிராமம் என்றும் அழைக்கப்படுகின்றன.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 555

    0

    0