ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்… தூள் கிளப்பியதா துணிவு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Author: Vignesh11 January 2023, 11:30 am
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் அஜித் வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபராக வருகிறார்.
வங்கிகள் கிரெடிட் கார்டு, மியுச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என படத்தில் விரிவாக துணிவு படத்தில் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து துணிவு திரைப்படம் விவரிக்கிறது. அஜித் வங்கியில் ஏன் கொள்ளையடிக்கிறார், கொள்ளையடிக்கும் போது மாட்டிக் கொண்டாரா என்பதே துணிவு படத்தின் மீதி கதை.
“அஜித் ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் சிறந்த விருந்தாக அமையும்,” என ரசிகர் ஒருவர் தெரிவித்தார். “துணிவு திரைப்படம் ஆங்கில படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டு இருக்கிறது,” என ரசிகர்கள் தெரிவித்தனர்.
“அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்தேன். அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது,” என அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்தார். படத்தில் வேறு எந்த படத்தில் சாயலும் இல்லை என்று ரசிகர் ஒருவர் கூறினார்.
“துணிவு படத்தின் முதல் பாதி வரை படம் விறுவிறுப்பாக அமைந்து இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி திரைப்படம் சற்று தொய்வடைந்து விட்டது,” என படத்தை பார்த்த ரசிகர் பகிர்ந்து கொண்டார். வலிமை படத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், துணிவு படம் பார்த்த பிறகு ஏற்படவில்லை என ரசிகர்கள் கூறினர்.

படத்தின் இயக்குநர், வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து சிறப்பாக விவரித்து இருக்கிறார். வங்கிகள் நமது தனிப்பட்ட தகவல்களை திரட்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை துணிவு படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் தங்களது விமர்சங்களை தெரிவித்தனர்.
அஜித் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் அஜித் ஸ்டைலாக தெரிகிறார். துணிவு படத்தை அஜித் தனது தோளில் சுமந்து இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். 10 வருடங்களுக்கு பிறகு இன்னொரு மங்காத்தா போல இருப்பதாக மற்றொரு ரசிகர் கூறினார்.
படத்தின் இரண்டாவது பாதியில் உள்ள தொய்வை தவிர்த்து விட்டு பார்த்தால் துணிவு நன்றாக இருப்பதாக ரசிகர் ஒருவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த அஜித் திரைப்படத்தில் சில காட்சிகள் இழுவையாக இருந்தது, ஆனால் துணிவு மிகச்சிறப்பாக இருக்கிறது.
துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது என ரசிகர்கள் கூறினார்கள்.