ஓடுடா… ஓடுடா… ஓடுடா… உயிர்பலிக்காக வெறிகொண்டு அலையும் கருப்பன்.. பீதியில் தாளவாடி மக்கள்… சாதிப்பாரா சின்னத்தம்பி..?
Author: Babu Lakshmanan12 January 2023, 5:01 pm
ஈரோடு : தாளவாடி அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கருப்பன் யானையை விரட்ட 2 கும்கி யானைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்டு தாளவாடி, ஆசனூர், ஜீர்கள்ளி, விளாமுண்டி, கேர்மாளம் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்குள் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, யானை உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடும். அவ்வாறு வெளியேறும் வனவிலங்குகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. அங்குள்ள விவசாய தோட்டங்களை சூறையாடி வரும் இந்த யானைக்கு கருப்பன் என பெயர் வைத்துள்ளனர். இரவு நேரங்களில் தோட்டங்களில் காவலுக்காக இருக்கும் விவசாயிகளை கருப்பன் துரத்தி வந்தது.
எனவே, கருப்பனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன், சின்னத்தம்பி ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ‘கருப்பன்’ யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.
ஆனால் வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. இதனால் கடந்த ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கருப்பனை விரட்ட இரு கும்கி யானைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டள்ளன. இதனிடையே, கருப்பன் யானை பொதுமக்களை துரத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.