மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து வந்த காவலர்… வயலில் திடீரென பிரிந்த உயிர்… காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு..!!
Author: Babu Lakshmanan13 January 2023, 2:37 pm
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வயலில் மாரடைப்பால் இறந்த மூதாட்டி உடலை தோளில் சுமந்து வந்த காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கீழநவ்வலடிவிளையை சேர்ந்தவர் சித்திரைவேல் மனைவி அம்மாள்தங்கம் (67). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் அந்த ஆடுகளுக்கு புல் அறுக்க அருகே உள்ள வயலுக்கு சென்று வருவார். அதேபோல் நேற்று காலை குரும்பூர் அருகே உள்ள நாககன்னியாபுரத்தில் உள்ள வயலுக்கு வந்துள்ளார்.
அங்கே புல் அறுத்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் குரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அம்மாள்தங்கம் உடலை பார்வையிட்டு விசாரித்தனர்.
தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் ரோட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயலில் அம்மாள்தங்கம் உடல் இருந்ததால் ஆம்புலன்சில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த குரும்பூர் காவலர் காளிமுத்து சற்றும் யோசிக்காமல் மூதாட்டி அம்மாள்தங்கம் உடலை தோளில் சுமந்து வந்து ஆம்புலன்சுக்கு கொண்டு வந்தார்.
பின்னர், அவரது உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் காவலர் காளிமுத்துவை பாராட்டி வருகின்றனர்.