ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்… திமுக அரசுக்கு புதிய நெருக்கடி…!!
Author: Babu Lakshmanan14 January 2023, 6:27 pm
ஆளுநர் ஆர்.என்.ரவி பொது வெளியில் தமிழக மக்களின் சிந்தனையை கிளறி விடும் விதமாக அவ்வப்போது கூறும் சில கருத்துகள் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருவது கண்கூடான விஷயம்.
இதனால்தான் ஆளுநராக பதவியேற்று பதினாறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தொடர்ந்து அவரை திமுக தலைவர்களும், காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்களின் தலைவர்களும் போட்டு தாக்குவது இன்னும் ஓய்ந்த பாடில்லை.
ஆளுநர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் திணிக்க பார்க்கிறார், மத்திய பாஜக அரசின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுகிறார் என்று தொடர்ந்து இந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
வார்த்தைகள் தவிர்ப்பு
இந்த நிலையில்தான், கடந்த ஒன்பதாம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரையில் திமுக அரசு எழுதிக் கொடுத்த முக்கிய அம்சங்களை தவிர்த்து விட்டதுடன் தனது சொந்த கருத்துகளையும் அதில் சேர்த்து விட்டார் என்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் கூறி அந்த உரையை ஏற்கக் கூடாது என்று ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுநர், சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து ஆளுநர் ரவியை திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் கோபம் கொப்பளிக்க மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேடைகளிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஒரு சிலர் அவரை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதையும் காண முடிகிறது.
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின், “சட்டப்பேரவையில் திமுகவைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது” என்று உடனடியாக வலியுறுத்தவும் செய்தார்.
அதேபோல் திமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் யாரும் ஆளுநருக்கு எதிராக பேனர்கள் வைப்பது,போஸ்டர்கள் ஒட்டுவது, கடுமையாக விமர்சித்து பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.
அதன்பிறகு கடந்த 13-ம் தேதி வரை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் யாரும் ஆளுநரை தாக்கி பேசவில்லை.
ஆபாச பேச்சு
ஆனாலும் பொது இடங்களில் திமுகவினர் ஆளுநர் ரவியை கன்னா பின்னாவென்றும் அவதூறாகவும் பேசுவது குறையவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதில் வல்லவர் என்று கூறப்படும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, நட்சத்திர பேச்சாளர்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இருவரும், வரம்பு மீறி ஆளுநரை தாக்கி பேசி இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியானது. சமூக ஊடகங்களிலும் அவர்கள் பேசும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆர்.எஸ். பாரதி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “அந்த ஆளுக்கு கை, கால் எல்லாம் உதறுகிறது. நான் பார்த்தேன். கொஞ்சம் கண் சாடையை காட்டி இருந்தால் வீட்டுக்கு போயிருக்க முடியுமா? இந்த வேலையை செய்வதற்கு பல்கலைகழகத்துக்கு போய் படித்து பட்டம் வாங்கிட்டா வர வேண்டும்?
எது கிடைத்தாலும் தூக்கி அடி என சொன்னால் அடிச்சிட்டு போயிட்டே இருப்பான். இதுக்கு என்ன ஸ்பெஷல் கோர்ஸ் ஏதாவது தேவையா? சட்டப் பேரவையில் முதலமைச்சர் இன்றைக்கு ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். நான் பெருமைக்காக சொல்லலை. இதில் ஜெயலலிதா இருந்திருந்தால் அந்த ஆளு உதை வாங்காமல் போயிருக்க மாட்டான்” என்று கொந்தளித்தார்.
பாஜக கண்டனம்
இதை தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி வன்மையாக கண்டித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, ஆளுநரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்கு ‘நாங்கள்’ தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, திமுகவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற அயோக்கியனை கைது செய்து சிறையிலடைக்கவில்லையெனில் ஆளுநர் குறித்த அந்த தரம் கெட்ட அந்த பதரின் வார்த்தைகள் திமுக ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதையே உறுதி செய்யும்.
ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சட்டப் பேரவையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட திமுக சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
தமிழக காவல்துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். தீவிரவாத சக்திகளோடு திமுகவிற்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய வேண்டும்.
உண்மையிலேயே, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு இருவரையும் திமுகவை விட்டே நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு ஸ்டாலின் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என நாராயண் திருப்பதி காட்டமாக கூறியுள்ளார்.
புகார்
தற்போது இதில் இன்னொரு அதிரடி திருப்பமும் நிகழ்ந்துள்ளது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வெளியில் கூற முடியாத அளவிற்கு ஆளுநரை அவதூறான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் விவகாரத்தை ஆளுநர் மாளிகையும் கையில் எடுத்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “ஆளுநர் ரவி குறித்து திமுக. பேச்சாளர் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இதனால் அவர் மீது இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870ன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
திமுகவுக்கு நெருக்கடி
மேலும் அந்த புகார் மனுவுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் மீது போலீசில் புகார் கூறப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்படும் புகார் என்பது ஆளுநரே அளிக்கும் புகாராகத்தான் கருதப்படும். எனவே இது சாதாரண விஷயம் அல்ல. இதன் மூலம் தனது கட்சியின் பேச்சாளர் மீது திமுக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால் இது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையையும் ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆர் எஸ் பாரதியின் பேச்சோ ஒரு முன்னாள் எம் பியின் பேச்சு போல இல்லை. நாலாம் தர மேடைப் பேச்சாளர் போல பேசி இருக்கிறார். அதில் ஏன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சம்பந்தமில்லாமல் அவர் இழுத்து விட்டார் என்பதும் தெரியவில்லை. ஜெயலலிதா மீது அவர் கொண்டுள்ள வன்மத்தையே இது காட்டுகிறது. எது கிடைத்தாலும் தூக்கி அடி என சொன்னால் அடிச்சிட்டு போயிட்டே இருப்பான் என ஆளுநரை மிரட்டும் விதமாக பேசியதற்காக, ஆர் எஸ் பாரதி மீதும் ஆளுநர் மாளிகை புகார் அளித்திருக்கலாம்” என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு என்பது நமது குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரின் சட்டபூர்வ அதிகாரங்களில் ஏதாவதொன்றை ஏதாவதொரு வழியில் அவர்கள் பயன்படுத்துவதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ கட்டாயப்படுத்தும் உள்நோக்கத்துடன் தாக்கிப் பேசுவது ஆகும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு அபராதத்துடன் அதிகபட்சமாக
7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்” என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.