களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்த காளைகள்.. பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2023, 10:22 am
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது.
அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் கண்டு களித்து வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலத்தை சேர்ந்த 3வயது சிறுமி டோரா அவிழ்த்த காளை வெற்றிபெற்றது.