‘வெறும் கையால பாத்ரூம் கழுவ சொல்றாங்க… பண்ணலனா, கெட்ட வார்த்தையிலேயே திட்றாங்க’… அரசுப் பள்ளி மாணவி பகீர் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan18 January 2023, 2:30 pm
தூத்துக்குடி ; அரசுப் பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகக் கூறி, கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த மாணவர்களை தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், பாடம் நடத்தாமல் ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடி வருவதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) சின்னராசு, வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.