அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கு.. இந்த முறை விடமாட்டோம் : வெளிப்படையாகவே சொன்ன நயினார் நாகேந்திரன்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 2:31 pm

நெல்லை ; அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. பாஜக சட்டமன்ற குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தொடர்ந்து ஐந்து முறை எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். குறிப்பாக, நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 350 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சுத்தமல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய இருக்கிறது.

ஈரோடு தொகுதியில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தமாக போட்டியிட்டது. தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் பேசி முடிவு செய்யும். அங்கு ஏற்கனவே 8000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே, இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் வரும்போது இணைந்து செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில், ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

எனவே, இதை அரசியல் ஆக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஆளுநர் பொறுப்பாக மாட்டார். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் விளையாட்டாக பேசியிருப்பார்.

நடு சென்ட்ர் என்று கூறினால் அதில் நடு என்பதும் ஒன்றுதான். சென்டர் என்பதும் ஒன்றுதான். எனவே தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்றுதான். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. அதிமுகவை பொறுத்தவரை யார் எப்படி பேசினாலும், அவர்கள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதால், அதிமுகவுக்கு பலம். கருத்து வேறுபாட்டோடு தேர்தலில் போட்டியிட்டால் பலவீனம் தான் ஏற்படும்.

அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தவில்லை. அப்படி இருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது கட்சி தலைமை அறிவிப்பார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற டாஸ்மாக் நேரத்தை குறைக்க வேண்டும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். விவேகானந்தர் நூறு இளைஞர்களை கேட்டார். ஆனால் தற்போது இளைஞர்கள் டாஸ்மாக் பக்கம் செல்கிறார்கள், என்று தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0