கேள்வி கேட்டது குத்தமா..? 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்..!
Author: Babu Lakshmanan21 January 2023, 1:06 pm
பொது பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டிய நபரை எதிர்த்து கேள்வி எழுப்பிய 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் பகுதியில் பெருமாள் நாயக்கர் (70) என்பவர் தன்னுடைய மனைவி மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். பெருமாள் பெரு விவசாயியாகவும், விவசாயக் கூலியாகவும் இருந்து வருகிறார். தெரிந்த நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் வருகிறார்.
ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி பேரன் பேத்தி உள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுக் கொண்டு சுமார் ஐந்து வருட காலமாக நேதாஜி நகர் பகுதியில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டில் பெருமாள் தனியாக வசித்து வருகிறார்.
இவரின் வீட்டு அருகே மதன் என்ற ஆட்டோ டிரைவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவே உள்ள பொதுப் பாதையில் (புறம்போக்கு இடம்) மதன் பள்ளம் தோண்டி வீடு கட்ட கடைக்கால் போட முயற்சித்த போது, அப்பகுதி மக்களுடன் சேர்ந்து பெருமாள் அதை தடுத்துள்ளார்.
இருவர் வீடுகளுக்கும் நடுவே உள்ள பொறம்போக்கு இடத்தில் மதன் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதால், அவ்வப்போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்படுவது உண்டு. அதேபோல் கடந்த மூன்று நாட்களாக இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை பெருமாளை மதன் முறைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை பெருமாள் தட்டிக் கேட்டதற்கு இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து ஆவேசமடைந்த மதன் அருகே இருந்த பெரிய கல்லை தூக்கி பெருமாள் தலையின் மீது ஓங்கி போட்டுள்ளார். அதில் பெருமாளின் பற்கள் அனைத்தும் உடைந்து கொட்டியது. முகம் மற்றும் மண்டை உடைந்து ரத்தம் குபு குபு என பெருகியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார்.
இதைக் கண்ட ஆட்டோ டிரைவர் யூனிஃபார்ம் டிரஸ்ஸுடன் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் வந்து ஆய்வு செய்தார். தாலுக்கா காவல்துறையினர் பெருமாளின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரதமர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய மதனை தேடி வந்தனர்.
ஐயங்கார் குளம் பகுதியில் காக்கி யூனிபார்ம் உடன் மதன் தப்பி செல்வதை கேள்விப்பட்ட தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் மதனை மடக்கி பிடித்து கைது செய்து தாலுக்கா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.
பட்டப் பகலில் 70 வயது முதிய விவசாயியை, புறம்போக்கு பொது வழிப்பாதை இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கல்லை தூக்கி போட்டு முதிய விவசாயியை கொலை செய்தது கோளிவாக்கம் கிராமத்தையே உலுக்கி விட்டது.