புதிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி : கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 1:29 pm
நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தவால் புதிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு பிரிந்து சென்றார்.
மேற்குவங்காளம் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் ஹசின், ஷமி மீது விபச்சாரம் மற்றும் குடும்ப துஷ்பிரயோகம் தொடர்பாக புகார் அளித்தார்.
புகார் அளிக்கப்பட்ட பிறகு, ஷமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வீட்டு துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஷமி பல்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
எனினும், ஷமி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா 2018 ஆம் ஆண்டில், மாதாந்திர ஜீவனாம்சம் ரூ.10 லட்சம் கோரி ஹசின் வழக்கு தொடர்ந்தார். தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமும் கேட்டு இருந்தார்.
இந்த வழக்கில் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும்.
2020-21 நிதியாண்டிற்கான இந்திய வேகப்பந்து வீச்சாளரின் வருமான வரிக் கணக்கின்படி, அந்த நிதியாண்டில் அவரது ஆண்டு வருமானம் ரூ. 7 கோடிக்கு மேல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் மாதாந்திர ஜீவனாம்ச கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், ஷமியின் ஆலோசகரான செலிம் ரஹ்மான், ஹசின் ஜஹான் ஒரு தொழில்முறை பேஷன் மாடலாக வேலை செய்வதன் மூலம் நிலையான வருமானம் ஈட்டுவதால், அந்த அதிக ஜீவனாம்சத் தொகைக்கான கோரிக்கை நியாயமானது அல்ல என்று கூறினார்.
இறுதியாக, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திங்கள்கிழமை, மாதாந்திர ஜீவனாம்சம் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயம் செய்தது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்தாலும், மாதாந்திர ஜீவனாம்சம் அதிகமாக இருந்திருந்தால் தான் நிம்மதியா இருந்திருப்பேன் என்று ஹசின் ஜஹான் கூறினார்.