ஓரம் போ..ஓரம் போ.. புதிய சாதனையில் இந்திய கிரிக்கெட் அணி : நியூசிலாந்தை வீழ்த்தி ஒரே நாளில் ‘டபுள் ட்ரீட்’!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 9:22 pm

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். சதம் அடித்த கையோடு இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

ஒரு கட்டத்தில் 26 ஓவரில் 212 ரன் என்றிருந்த இந்தியாவின் ஸ்கோர் விக்கெட்டுகள் வீழ்ந்ததும் மளமளவென ரன்னும் குறைந்தது. இறுதி கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டிய பாண்ட்யா 37 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் 101 ரன், சுப்மன் கில் 112 ரன், பாண்ட்யா 54 ரன் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பிளெய்ர் டிக்னர், ஜேக்கப் டல்ப்பி தலா 3 விக்கெட்டும், மைக்கேல் பிரேஸ்வெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலெனும், டெவான் கான்வேயும் களம் இறங்கினர். ஆட்டத்தின் 2வது பந்திலேயே பின் ஆலெனை பாண்ட்யா போல்டாக்கினார். இதையடுத்து கான்வேயுடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. ஒரு முனையில் கான்வே நிலைத்து நின்று ஆடினார்.

மறுமுனையில் நிக்கோல்ஸ் 42 ரன், டேரில் மிட்செல் 24 ரன், லதாம் 0 ரன், கிளென் பிலிப்ஸ் 5 ரன், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 41.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் தாக்கூர், குல்தீப் தலா 3 விக்கெட்டும், சஹால் 2 விக்கெட்டும், பாண்ட்யா, உம்ரான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி 27ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிட்கெட்டில் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்