எம்பி சீட்டுக்காக காங்கிரசிடம் பேரம் பேசினாரா கமல்?… ஈரோடு இடைத்தேர்தல் ஆதரவின் ரகசியம்… கலாய்க்கும் நெட்டிசன்கள்!
Author: Babu Lakshmanan26 January 2023, 5:24 pm
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்தக் கூட்டணியில் ஏற்கனவே இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து விட்டன.
விலகிய பாமக
இவை தவிர 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களது கூட்டணிக்குள் திமுக கொண்டு வர விரும்பிய பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றின் ஆதரவையும் இளங்கோவனுக்கு பெறுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். மறைமுக பேச்சுவார்த்தையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் இப்போதே திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டால் 2024 தேர்தலில் பாமக பேரம் பேசும் தகுதியை இழந்து விடும் என்று கருதி ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அக்கட்சி ஒதுங்கிக் கொண்டது.
அதேநேரம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து விட்டார். இந்தத் தேர்தலில் கணிசமான ஓட்டுகளை வாங்கி தனது கட்சியின் பலத்தை நிரூபிப்பதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ விரும்பிய எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டு பெற முடியும் என்பது அவருடைய கணக்கு.
கமல் ஆதரவு
என்றபோதிலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மட்டும் உடனடியாக தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்காமல் போக்கு காட்டியது.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும் முதலில் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் டெல்லியில் அவருடைய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது கமல்ஹாசனும் அவருடைய கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டதால் நிச்சயம் அவர் காங்கிரஸ் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார். அவருக்கு வேறு வழியே இல்லை என்று அசட்டையாக இருந்து விட்டனர். எனினும் இது களம் காணும் இளங்கோவனுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது.
இதற்கிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் ஸ்டாலினை கடந்த 23-ந்தேதி சந்தித்து வாழ்த்து பெற்றார். கூட்டணி கட்சி தலைவர்களான பாலகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, திருமாவளவன், ஆகியோரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அன்றே கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து காங்கிரசுக்கு அவர் ஆதரவு கேட்டார். ஆனாலும் கமல் பிடி கொடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஜனவரி 25ம் தேதி சென்னையில் நடத்திய கமல்ஹாசன் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தனது கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தார்.
ஏன் தயக்கம்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக முடிவு எடுத்துள்ளோம். அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம். அவரை ஆதரித்து நான் பிரச்சாரமும் மேற்கொள்வேன். இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழகத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு. இது இப்போதைய முடிவு. இன்னும் ஒரு ஆண்டு கழித்து எடுக்கவேண்டிய முடிவை இப்போது யாரும் பெறமுடியாது” என்று குறிப்பிட்டார்.
இந்த முடிவை எடுக்க ஏன் தயக்கம்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது தயக்கம் அல்ல. இது பரந்த நோக்கம். இன்னும் 12 மாதங்களே உள்ளது. தமிழகத்துக்கும், தேசத்துக்கும்… இதனை முன்னோட்டம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதே மாதிரிதான் என்று எடுத்துக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்தார்.
அடுத்ததாக உங்களுக்கு எம்பி ஆக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாக சொல்கிறார்களே?என இன்னொரு கேள்வியை எழுப்பியபோது தனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதை கமல்ஹாசன் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.
“ஏன் கூடாது. கமல்ஹாசன் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கே கோபப்படாதபோது, எம்பி ஆக வேண்டும் என்ற குரலை ஏன் கிண்டல் அடிக்கிறீர்கள்? ஆசை இருக்கலாம். என் ஆசை என்பது மக்களுக்கு பணி செய்வதுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.
கமல் இப்படி எம்பி பதவி குறித்து பேசியது ஆச்சர்யமான விஷயம் இல்லை என்றாலும் கூட, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க அவர் ஏன் இரண்டு நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டார் என்பதுதான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
பேரம் பேசினாரா..?
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சொல்வது என்ன?… “கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 16 லட்சம் ஓட்டுகள் வாங்கி இருந்தது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இது 10 லட்சமாக குறைந்து போனது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றும் போனார். அப்போது முதலே எம்எல்ஏ ஆவதை விட எம்பி ஆக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. அதுவும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாத சூழல் ஏற்பட்டு இருந்தால் ராகுல் காந்தியின் விருப்பப்படி மக்கள் நீதி மய்யத்துடன்தான் கூட்டணி அமைந்திருக்கும் என்பது நிச்சயம்.
அதனால்தான் இப்போதும் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். ராகுல் அழைத்ததும் டெல்லிக்கு உடனடியாக சென்று அவருடைய நடை பயணத்திலும் பங்கேற்றார். எனவேதான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு கோரியபோது, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை தொகுதியை திமுகவிடம் கேட்டு தனக்கு பெற்றுக் கொடுத்தால் போதும் என்ற முன் நிபந்தனையை ராகுல் காந்திக்கு கமல் வைத்ததாகவும் அதை ராகுல் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது. இதற்காகத்தான் கமல் இரண்டு நாள் கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அவர் எடுக்கும் முடிவுதான் கட்சியின் முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மற்றபடி ஜனநாயக முறைப்படி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூறுகிறேன் என்று அவர் சொன்னதெல்லாம் நம்பக்கூடியது அல்ல.
கோவை நாடாளுமன்ற தொகுதி என்றால் மிக மிகக் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்துதான் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தென் சென்னை தொகுதியை கமல் இப்போது கேட்டிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு தோல்வியை கொடுத்த கோவை பக்கமே அவர் எட்டிப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான் நிஜம்!”
என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கிண்டல்
இந்த நிலையில் கமல்… அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில் கமல்ஹாசனின் தேர்தல் நிலைப்பாடு பற்றி சுருக்கமாக ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
“முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க? குடும்ப அரசியல்ங்கிற பேர்ல நாட்டையே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா?…இல்ல நாம உரிமைகளுக்காக போராடினபோது நம்மல அடிச்சு துரத்தினாங்களே அவங்களுக்கா?… என்று கோபம் கொப்பளிக்க ஆத்திரத்துடன் முந்தைய தேர்தலின்போது கமல் ஆவேசமாக கேள்வி எழுப்பிய டிவி விளம்பர காட்சியையும், தற்போது திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து அவர் பேசும் காட்சியையும் இணைத்து ஒரே வீடியோவாக அது வெளிப்பட்டு இருக்கிறது.
இதை வைத்து நெட்டிசன்கள் கமல்ஹாசனை கழுவி கழுவி ஊற்றியும் வருகின்றனர்.
இதற்கு கமல் சும்மா இருக்கலாம் என்று கிண்டலாக அட்வைஸ் செய்வது போல “இதுக்கு பருத்தி மூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாமே” என்ற கலகலப்பு பட நகைச்சுவை வசனத்தையும் குறிப்பிட்டு அவரை கலாய்த்தும் இருக்கின்றனர்.
கமலுக்கு இது தேவைதானா?…