தேநீர் விருந்தில் சுவாரஸ்யம்… நேருக்கு நேர் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2023, 7:28 pm
அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழ்நாடு அரசு இடையிலான மோதல் அதிகரித்து வந்தது. குறிப்பாக தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டசபையில் தமிழ்நாடு அரசு அளித்த ஆளுநர் உரையில் மாற்றம் செய்து வாசித்தது உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும். தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக அரசியல் கட்சிகளின் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறிப்பாக அழைப்பிதழில் தமிழ்நாடு என்றும், அரசின் இலச்சினையை பொறித்தும் தேநீர் விருந்துக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதேபோல் நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், திமுக முடிவு என்ன என்பது தெரியாமல் இருந்தது.
இதனிடையே இன்று காலை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் சந்தித்து சிரித்து பேசினர்.
இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறிது நேரம் ஆளுநர் ரவியுடன் உரையாற்றினார்.
அதேபோல் இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ-க்களும் பங்கேற்றுள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்து அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது, அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகொடுத்து வந்த போது, அதே வரிசையில் அண்ணாமலையும் இருந்தார்.
அப்போது மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலையும் கைகொடுத்தார். இந்த ஆளுநர் மாளிகை விருந்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.