தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்ட 13 வயது சிறுவன் : அதிர வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 7:45 pm

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார்.

ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடந்த செவ்வாய்கிழமை அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல் – மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

இதையடுத்து, இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

காரில் வந்த 21 வயது பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு கரையில் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த நபர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களால் இஸ்ரேல் – பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

13 வயதான பாலஸ்தீனிய சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலிய தந்தை (வயது 47), மகன் (வயது 23) படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த தந்தை – மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இஸ்ரேலிய தந்தை – மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 13 வயது பாலஸ்தீனிய சிறுவனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 762

    0

    0