போதையில் 28 வயது நபரை கொடூரமாக தாக்கும் 17 வயது சிறுவன் : அண்ணன், தம்பி கைது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 4:45 pm

காஞ்சிபுரம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் உட்பட இரண்டு சகோதரர்கள் சேர்ந்து 28 வயது வாலிபரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அவுலியா பாதுஷா குத்புல் அக்தாப் தர்கா உள்ளது. இந்த வளாகம் முழுவதும் வக்ப்ஃபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தர்காவில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சிவகாஞ்சி காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த தர்கா வளாகத்தின் அருகேயும், உள்ளேயும் மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத செயல்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு 9.30 மணி அளவில் அவுலியா தர்கா அருகே போதையில் ஒரு சிறுவன் உட்பட சகோதரர்கள் இரண்டு பேர் சேர்ந்து, மற்றொரு கஞ்சா போதை ஆசாமியான கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை சராமரியாக கையாலும் , காலாலும் கட்டையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமுற்ற கார்த்திக் மூச்சு பேச்சில்லாமல் மயங்கினார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கார்த்திகை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர், காஞ்சிபுரம் அடுத்த கோனேரி குப்பம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சிம்மராசு என்பவரின் மகன் கார்த்திக் (28) என்பதும். இவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரிய வந்தது.

அதே போல், தர்கா வளாகத்தின் உள்ளே உள்ள தர்கா தெருவை சேர்ந்தவர் கமால். இவரின் மகன்கள் யாசர் (22), ரூபின் (வயது 17) ஆகிய இரண்டு பேர்களும் சேர்ந்து அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் தகராறு செய்வார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் போதையில் யாசர், ரூபின் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்திகை கடுமையாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சகோதரர்கள் யாசர், ரூபின் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.போதையினால் மனிதநேயம் மரித்து விட்டதோ என இந்த வீடியோவை பார்க்கும் போது தோன்றுகிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 548

    0

    0