பாஜகவில் இருந்து 5 பேர் திடீர் சஸ்பெண்ட்… அதிரடி ஆக்ஷனில் அண்ணாமலை : வெளியான காரணம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 7:14 pm

தமிழ்நாடு பாஜகவில் சமீபகாலமாக அடிதடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் சங்கராபுரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினர் நாற்காலிகளை வீசி அடித்து சண்டை போட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் பாஜக நிர்வாகி ஒருவரை கட்சி செயற்குழு கூட்டத்தின்போதே சிலர் தாக்கிய நிலையில், அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்ட 5 நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் 5 பேருடன் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் 5 பேர் நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நீக்கத்திற்கான பின்னணி காரணமாக கூறப்படுவது, தமிழகம் முழுவதும் கடந்த 29ஆம் தேதி பாஜக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் 66 இடங்களில் நடைபெற்றது.

அதன்படி சென்னை மேற்கு மண்டலம் சார்பாக பாஜக செயற்குழு கூட்டம் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தீர்மானங்களை வாசித்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரவாயல் மேற்கு மண்டல தலைவர் டி.டி.பி.கிருஷ்ணா, “எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது திடீரென ஒரு தரப்பினர் கிருஷ்ணாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த கிருஷ்ணாவை அவரது ஆதரவாளர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உதடு கிழிந்த நிலையில் அவருக்கு 5 தையல்கள் போடப்பட்டது.

உட்கட்சி பிரச்சனை என்பதால் கிருஷ்ணா இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சமப்வம் தொடர்பாக பாஜக மாநில தலைவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணாவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் அண்ணாமலை.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!