சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவி மறுவாக்கு எண்ணிக்கை : அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி…

Author: Babu Lakshmanan
2 February 2023, 4:53 pm

சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கையில் மீண்டும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, மற்றும் மல்லிகா ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாக்கு எண்ணப்பட்டு, அதில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 2,554 வாக்குகளும், சுதா 2551 வாக்குகளும் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.

இதை எதிர்த்து வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த ஜனவரி 5 ம் தேதி உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, ஜனவரி 24ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முடிவுகளை அறிவித்தார். அதன்படி, மொத்தம் பதிவான 5357 ஓட்டுகளில் செளந்திரவடிவு 2553 ஓட்டுகள், சுதா 2551 ஓட்டுகள் மல்லிகா 65 ஓட்டுகள் பெற்றுள்ளனர் எனவும் இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் செளந்தரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2019ம் ஆண்டு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் தற்போது நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் இவரே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 464

    0

    0