இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-க்கா..? ஓபிஎஸ்-க்கா..? தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு ; எதிர்பார்ப்பில் அதிமுகவினர்..!
Author: Babu Lakshmanan2 February 2023, 7:22 pm
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு பதிலை அளித்துள்ளது.
ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருதரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.