என்னோட நீண்ட நாள் ஆசை… கி.வீரமணி தயாரா? அண்ணாமலை கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2023, 8:05 pm
நான் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றதும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசினேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற’தலைவா’ திட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அண்ணாமலை, “பாஜக தொண்டர்கள் நம் சித்தாந்தங்களை பின்பற்றுவதோடு, மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும்.
நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடனும் பழக ஆசைப்படுகிறேன்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எதிர்த்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும்போது நமது மனம் திறக்கும். நான் அத்தகையோருடன் பழகியிருக்கிறேன்.
அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப்பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.
நான் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சியினரிடம் கூறினேன்.
அதை கேட்டதும் பாஜக கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக தலைவர் கம்யூனிஸ்ட் தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.