பாஜக பின்னிய வலையில் சிக்கிய அமைச்சரின் மகன் : திமுக தலைமை எடுத்த நடவடிக்கை.. அரசியல் களத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 5:55 pm

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் 35 அமைச்சர்கள் உள்ளனர்.

அதில் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களின் வரிசையில், அமைச்சர் நாசரும் ஒருவர். அண்மையில் திமுக நிர்வாகி மீது கல் வீசி தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளானார்.

தற்போது அவரின் மகனும், ஆவடி மாநகர திமுக செயலாளராக செயல்பட்டு வந்த ஆசிம் ராஜாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசரின் மகன் ஆசிம் ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் பாஜக. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாகச் சென்று அகற்றியதாக பாஜக சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது அமைச்சரின் மகன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…