ராமஜெயம் கொலை வழக்கில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் : உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan9 February 2023, 2:08 pm
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கேஎன் நேரு. இவரது சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
2012 மார்ச் 29ம் தேதி நடைப்பயிற்சி சென்ற ராமஜெயம் வீடு திரும்பவில்லை. மர்மநபர்களால் கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் தான் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவரை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பல ஆண்டுகளாக சிபிஐ உட்பட பல்வேறு பிரிவு போலீஸார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமஜெயம் கொலை நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரித்தனர். மேலும் இவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது.
இதனால் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல்துறை அலுவலகத்தில் 12 பேருக்கும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனை நடந்தது.
டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல் துறை நிபுணர்கள், 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றனர். இந்த நிலையில் தற்போது இந்த உண்மை கண்டறியும் சோதனை குறித்த அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் ஷாக் அளிக்கும் வகையில் உள்ளது.
அதாவது வழக்கு தொடர்பான உண்மை விபரங்களை கண்டறியவே ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 12 பேரில் 11 பேர் சோதனையின்போது பொய்யான தகவலை கூறியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. திலீப் என்பவர் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனையில் உண்மையை தெரிவித்துள்ளார்.
மற்ற 11 பேர் கூறிய தகவல்களிலும் உண்மை தன்மை இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கேள்விகள் கேட்டபோது அவர்களின் இதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடு மாறுபட்டுள்ளதால் உண்மையை மறைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கில் இன்னும் உண்மை நிலை என்ன என்பது பற்றிய முழு தகவல் கிடைக்காத நிலை உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.