திமுகவை வீழ்த்த எங்களின் பிளான் இதுதான் ; அதிமுக நிச்சயம் ஜெயிக்கும்.. நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
Author: Babu Lakshmanan9 February 2023, 3:48 pm
நெல்லை ; ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம் என்றும் பாஜக ஆதரவளித்துள்ளதால் அதிமுக வெற்றி பெறும் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் ஊருடையாறு குடியிருப்பு செல்லும் சாலை புதிதாக அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதனை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலைக்கு ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்த பின்பு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம். பாஜக ஆதரவு கொடுத்துள்ளதால் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு கடலில் தான் பேனா வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும். அத்துடன் அதிகமான செலவும் ஏற்படும்.
எனவே, அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம், என தெரிவித்தார்.