ஈரோடு இடைத்தேர்தல் ; திட்டமிட்டே அதிமுகவினர் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு… திருமண மண்டபத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!!
Author: Babu Lakshmanan9 February 2023, 6:12 pm
ஈரோடு : அதிமுகவினர் அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் களம் ஆனது ஈரோட்டில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் இன்று மாலையில் நடைபெறும் நிலையில், கிழக்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள பிரகாஷ் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையினர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் பிரகாஷ் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்தியதாக தெரிய வந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அதிமுகவினர் வெளியேற்றினர். இதனால் அதிமுகவினருக்கும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவினரை வெளியேற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுகவினர், இந்த வார்டு பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக இருப்பதால் அதிமுகவினருக்கு கூட்டம் நடத்த அனுமதி கடிதம் எழுதிக் கொடுத்தும் தர மறுப்பதாக குற்றம் சாட்டினர்.