அஜித் படம் ‘அந்த’ படத்தின் காப்பியா : படக்குழு மீது இயக்குநர் பரபரப்பு புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2023, 9:02 pm
நடிகர் அஜித் நடித்த படத்தின் மீது இயக்குநர் ஒருவர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘வலிமை’. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார்.
இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘தங்க சங்கிலி’ என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், ராஜேஷ் ராஜா இதற்கு முன்பு அ.வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும், அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண இறுதியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.