கோவையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்.. நீதிமன்ற வளாகம் முன்பு ஒருவர் கொடூரக் கொலை.. பரபரப்பில் மாநகரம்!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 12:04 pm

கோவையில் இந்து அமைப்பு நிர்வாகி பிஜூ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு கொலை இன்று அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்தி என்கிற சத்திய பாண்டி (32) ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அடையாளத்தை மறைப்பதற்காக ஹெல்மெட் அணிந்து அங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சத்தியபாண்டியை வெட்ட முயன்றனர்.

இதைத்தொடர்ந்து சத்தியபாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல் அந்த வீட்டிற்குள் புகுந்து சத்தியபாண்டியை அரிவாளால் தலை, கை, கால், உடம்பு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே சத்தியபாண்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகவல் அறிந்த கோவை மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் சந்தீஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் உயிரிழந்த சத்திய பாண்டி கடந்த 2020ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து அமைப்பின் நிர்வாகி பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் என தெரிய வந்தது.

இந்த நிலையில் போலீசார் பிஜூ கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, சத்தியபாண்டி உயிர் தப்பிக்க முயன்ற போது, அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தம் எழுந்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், போலீசார் துப்பாக்கி சத்தம் குறித்தும் அதற்கான ஆதாரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது நபர் பலியாகினார். மற்றொருவர் பயங்கர வெட்டு காயங்களுடன் அவசர ஊர்தியில் ஏற்றி செல்லப்பட்டனர்.

5 பேர் கொண்ட கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகம் முன்பு பேக்கரியில் நின்று கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியுள்ளது. வெட்ட ப்பட்ட இருவர் கையிலும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் இருந்துள்ளது . ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவரின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும், அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் கோவை மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 637

    0

    0