கொலை நகரமாகும் கோவை… அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதா..? திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்

Author: Babu Lakshmanan
13 February 2023, 5:31 pm

சென்னை : தமிழகத்தைத பாதுகாப்பில்லாத நிலைக்கு திறனற்ற திமுக அரசு தள்ளியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிர்கட்சிகளும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. அதற்கேற்றாற் போலவே, அண்மையில் சென்னையில் நகைக்கடையில் துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை மற்றும் நேற்று திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பங்கள் அரங்கேறின.

அதேவேளையில், கோவையில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்து பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், மீண்டும் எதிர்கட்சிகள் சட்டம், ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டன.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை! கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக
சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!