துருக்கி, சிரியா எதிரொலியால் சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுமா? ஆராய்ச்சியாளர்கள் கூறிய பரபரப்பு தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2023, 5:01 pm
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலக நாடுகளை நடுங்கச்செய்துள்ளது. எங்கு திரும்பினாலும் பிணக்குவியல்கள் இருந்தது குலை நடுங்க செய்தது.
இந்த நிலையில் இதன் எதிரொலியால் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட போது,
இந்தியாவை பொறுத்தவரை குஜராத், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகள் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அதிக பாதிப்புள்ள பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. இவை பிரிவு 5-ல் அமைந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சற்று பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைவான வாய்ப்பு கொண்ட பிரிவு 2-ல் இருந்தாலும், சென்னையானது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு கொண்ட பகுதியில் பிரிவு 3-ல் இடம்பெற்றுள்ளது என கூறியுள்ளனர்.
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படாத பாதுகாப்பான பகுதி என எதையும் கூற முடியாது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள், ஒட்டுமொத்த இந்திய தட்டும் ஒரே இடத்தை நோக்கி நகராமல், அங்கங்கே சில வெடிப்புகள் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே சிறிய அளவிலான நிலநடுக்கங்களால் சீற்றம் எடுக்கும் பாறைக்குழம்பு அவ்வபோது வெளியேறிவிடுவதால், இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பது வல்லுநர்களின் கூற்றாக இருக்கிறது.
சற்று பாதுகாப்பான பகுதி என்பது நிம்மதி அளிப்பதாக இருந்தாலும், நிலநடுக்கத்தை தாங்கும் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் கட்டாயம் என்ற அறிவுரையையும் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.