சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன்… கண்இமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்… உயிர்தப்பிய 15 பேர்..!!
Author: Babu Lakshmanan18 February 2023, 10:48 am
கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக மினி வேனில் நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றுள்ளனர். வண்டியில் டிரைவர் உள்பட ஆண்கள் 12 பேர், பெண்கள் இரண்டு பேர் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர்.

வேன் நெல்லை பாளையங்கோட்டையில் அருகில் உள்ள டக்கரம்மாள் புரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மினி வேனில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதை உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் கணேசன், அந்த பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கி விட்டுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் மின் வேன் முழுவதும் மளமளவென தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ விபத்தால் வேன் முழுவதும் தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்த 15 பேரும் உயிர் பிழைத்தனர். கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது மினிவேன் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.