துருக்கியை துரத்தும் துயரம்… மீண்டும் நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த கட்டிங்கள் ; பீதியில் பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan21 February 2023, 10:40 am
துருக்கியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலையச் செய்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 என்ற அளவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கி மட்டுமல்லாது சிரியாவிலும் பாதிப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இது வரை 46,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுப்படுகிறது. இந்த துயர சம்பவம் துருக்கியின் வரலாறு காணாத பேரிடராக அந்த நாடு அறிவித்துள்ளது. அதேவேளையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் சாத்தியங்களும் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். அதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், துருக்கியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.