குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் என்னாச்சு..? ஈரோடு பிரச்சாரத்தின் போது முக்கிய தகவலை சொன்ன அமைச்சர் உதயநிதி!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 11:25 am

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு ராஜாஜி புரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- பெரியாரின் பேரனுக்கு கலைஞரின் பேரன் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். அதிமுக வேட்பாளர் வந்தால் விரட்டி அடிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி பேசும்போது மீசையுள்ள ஆண் மகனா, வேட்டி கட்டிய ஆம்பளையா என கேட்கிறார். ஆனால் இவர் எப்படி முதலமைச்சரானார் எனக்கூறி, தவழ்ந்து செல்லும் போட்டோவை காட்டியபோது மக்கள் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்:- அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு உண்மையாக இவர்கள் இல்லை. மூன்று கொலைகள், எத்தனையோ கொள்ளைகள் நடந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சட்டமன்றத்தின் காரை எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் செல்ல மாட்டோம் என கூறிவிட்டு, இன்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கமலாலயம் சென்று காத்துக் கிடக்கிறார்கள்.

பாஜக அலுவலகம் கட்சி அலுவலகம் கிடையாது. அது ஒரு பயிற்சி சென்டர். ஏனென்றால் அங்கிருந்த தமிழிசை கவர்னர் ஆகிவிட்டார். தற்போது சிபி ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கவர்னராக அறிவிக்கப்படுவார். இபிஎஸ் மாநில தலைவராக வருவார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் ஐந்து, ஆறு மாதத்தில் முதலமைச்சர் நிறைவேற்றுவார். 2019ம் ஆண்டு 3000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கு 300 கோடி ரூபாய் செலவு செய்தனர். ஆனால் செங்கல் மட்டுமே வைத்துள்ளனர். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். பாஜக மாநில தலைவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்துள்ளார். எதனை ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை.

வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 407

    0

    0